சகுனத்தை அறிவதிலும் புஷ்பம் பயன்படுகிறது. சுவாமிக்கு அணிவிப்பதற்காக எதிரில் ஒருவர் மாலை கொண்டு வந்தால் - அது காரிய சித்தி - சுப சகுனம்.
மனிதர்களுக்கு போடுவதற்காக பூ மாலை ஏந்தி ஒருவர் எதிர் வந்தால், பணத்தினால்தான் காரியசித்தி என்பதனை அறியலாம்.
மகான்களுக்கு அணிவிக்க எதிரில் மாலையுடன் வந்தால், கடன் தொல்லை தீரும், பிறவி கடன், திருமணக் கடன் கூடத் தீர்ந்து விடும்.
பிரேதத்திற்கு அணிவிக்க மாலையுடன் எதிர் வந்தால் கெட்ட சகுனம், காரிய தடங்கல். அன்று வெளியில் செல்லலாகாது.
பூக்களிடம் இருந்து அறிய வேண்டியன: மல்லிகை தான் இருக்கும் இடத்தை சுகந்த நறுமணத்துடன் வைத்து கொள்ளும். பூலோகத்தில் மல்லிகைப் பூ இருந்தாலும், அதற்கான நறுமணம் யாவும் விண்ணுலகப் புஷ்ப லோகத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கும்.
மல்லிகையைப் போலவே மனிதர்களும் தாங்கள் இருக்கும் இடத்தை எப்போதும் பூக்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றுடன் நல்வாசனையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். துர்மணம் இருக்க கூடாது. இதன் காரணமாய்த்தான் மானுடர்கள் தலையிலோ, காதிலோ, பையிலோ, கையிலோ எப்போதும் மலர்களை வைத்திருக்கும் புனித பண்பாடு ஏற்பட்டது.
யார் வந்தாலும் எவ்வித பேதமும் இன்றி மலர்கள் நறுமணம் கொடுக்கும். இதுவே மலர்களின் தான, தர்மம். மலர்கள் தங்கள் மணத்தின் மூலம் புகட்டும் பாடத்தில் இதுவும் ஒன்று. இவ்வாறு நிறைய பாடங்களை மனித குலம் புஷ்பங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகவே மனிதன் பூக்களிடம் நிறைய பேசி வர வேண்டும் என்பது, பிறர் இதனைப் பார்த்து கேலி செய்வார்களோ என்று ஆரம்பத்தில் எண்ணக் கூடும். முதலில் மானசீகமாக பேசி வாருங்கள். பூக்கள் நிச்சயமாய் பதில் தருவதைச் சிறிது சிறிதாய்ப் புரிந்து கொள்ளலாம்.
மலர்கள் நறுமணத்தைத் தருவது போல, யார் எந்த நேரத்தில் தானமாய் வந்து கேட்டாலும் உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். இதன் உண்மைப் பொருளானது, ஏழைகளுக்கு ஏதேனும் கொடுப்பதற்கு உணவு, பழங்கள், பிஸ்கட், மிட்டாய் என்று எதையேனும். குறிப்பாய் பயணத்தின் போது எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள் என்பதே. எவருக்கும் காசாய்க் கொடுக்காதீர்கள். காசைக் கொடுத்து அதில் பீடி, சிகரெட் என்று தீயதை வாங்கினால் இந்த பாவத்தின் பங்கு அப்படி காசு கொடுத்தவரையும் தொத்தும். இயன்ற வரையில் பொருளாய்க் கொடுங்கள்.
முக்கியமாக உங்கள் அன்பினையும் சேர்த்து பரிமாறிக் கொடுங்கள். அதாவது எவரையும் வெறுக்காதீர்கள். அந்த அன்பு பல்கிப் பரவிப் பிறருக்கும் உதவும். நாட்டிலும் சாந்தத்தை நிரவும். அன்பும் பூக்களின் நறுமணம் போலவே எங்கும் நிரவும், கொடுக்க கொடுக்க குறையாது. வெறுப்பு, பகைமை, விரோதம், கிரோதம், வன்முறை, பயங்கரவாதம், போர் போன்ற தீயவை பெருகி வரும் கலியில் - மாமறை ஓதுதல், பூக்களின் நறுமணம், ஆலய உத்சவங்கள், தினசரி கோயில் தரிசனம், தான தர்மங்கள், வேள்விகள், நித்திய ஆலய பூஜைகள், பெரியோர்களின் தரிசனம், நல்ஒழுக்கம் போன்றவைதாம் அன்பு, சாந்தத்தைப் பூவுலகில் பரிமளிக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
பூக்கள் செடிகளில் இருப்பதை விட, இறைவனுக்கு பூஜைகளுக்கு, நற்காரியங்களுக்குப் பயன்படுகையில் அவற்றின் தெய்வசக்தி பன்மடங்காகின்றது. இதற்கு மனித குலம் உதவிட வேண்டும். பூக்குலத்திற்கு மனிதச் சமுதாயம் உதவுதல் என்பது பூக்களைப் பறித்து வழிபாடுகளுக்குப் பயன்படுத்துதல் என்பது தானே, இதில் பெரிதும் பயனடைவது மனித குலம் தானே. மனிதர்களுக்கு தானே இதில் அளப்பரிய புண்ணியம் கிட்டுகின்றது.

Comments
Post a Comment